Tuesday, 25 March 2014

ஹெலன் ஹெல்லர் - நம்பிக்கையின் மறுபக்கம்

முடியாதென்று 
முடங்கி போகிறவர்களா நீங்கள்?
அப்படியானால்...
இதை படியுங்கள் முதலில்...

ஹெலன் ஹெல்லர்....
இந்த பெயரை கேட்டிருக்கீங்களா?

தெரியலையே? ஏதாவது ஹாலிவுட் புதுமுகமான்னு பலர் உதடு பிதுக்கிறது தெரியுது?

எப்படி தெரியும் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்க அவர் ஜோதிகாவோ, சினேகாவோ, ஐஸ்வர்யாராயோ அல்லவே?

சரி... சரி... யோசிச்சு ரொம்ப மண்டைய உடைச்சுக்க வேண்டாம்....

நானே சொல்லிடுறேன்...

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் தஸ்கம்பியா என்ற சிற்றூரில் பிறந்தது 1880 ஜீன் 27-ல்.

2 வயது வரை - அழகான ஆரோக்கியமான குழந்தை. பெயர் ஹெலன் ஹெல்லர்.

2 வயது கூட நிரம்பாத நிலையில் திடீரென ஒரு நாள் காய்ச்சல் அந்த குழந்தைக்கு...

என்ன வகை காய்ச்சல் என்று மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை...

குழந்தையின் உயிரை எமன் குடித்து விடுவான் என அனைவரும் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தனர்...

எமன் உயிரைக் குடிக்கவில்லை.
ஆனால் குடித்தவை...
பார்வை சக்தி
கேட்கும் சக்தி
பேசும் சக்தி

ஆம்...
கண்கள் ஒளியிழந்தன...
காதுகள் ஒலியிழந்தன...
காது கேட்காத போது எப்படி ஒலியை உள்வாங்கி உணர்ந்து பேச முடியும்?

ஏழு வயது வரை அவருடைய உலகம் இருண்டு தான் போயிருந்தது...

அதன் பின் அவருக்கு ஒலியையும் ஒளியையும் ஊட்டி புதுமைப் பெண்ணாய் ஹெலனை மாற்றிய பெருமைக்குரியவர் - ஆன் சல்லிவன்.
ஆன் சல்லிவன் யார்? - ஹெலன் ஹெல்லரின் இருட்டுக்குள் ஒளியேற்றிய காரிகை - ஆசிரியை.

எப்படி கற்பித்தார் எட்டு வயது சின்னஞ் சிறு சிட்டுக்கு?
பொருளை தொட்டுணரச் செய்தார் விரல்களால்...
பின் அதன் பெயரை உள்ளங்கையில் எழுதிக் காட்டினார்.
ஹெலனும் அதை விளையாட்டாக எண்ணி விரைவில் பல சொற்களை கற்றுக் கொண்டார்.

பின் சிறிது சிறிதாக எழுத கற்றுக் கொண்ட ஹெலன் ப்ரெயில் முறையை கற்று தேர்ந்தார்.
பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார்.
அடுத்து...
ஹெலன் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்
ஸாரா புல்லர் - ஆசிரியை -'லிப் ரீடிங்' என்கிற உதடுகளை ஸ்பரிசித்து உணர்கிற கலையை கற்றுக் கொடுத்த மேதை.
வாயில் விரல் வைத்து உதடுகள் அசைவை உணர்ந்து ஓசை எழுப்ப பழகி, மற்றவர் அளவுக்கு இல்லாவிடினும், மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு பேச கற்றுக் கொண்டார்.

கேட்கும் திறனை மட்டும் அவரால் பெற இயலவில்லை. அதற்காக அவரும் சோர்ந்து போகவில்லை. உதட்டில் கை வைத்து உதட்டசைவில் வார்த்தைகளை புரிந்து கொள்ள கற்றுக் கொண்டார்.
பிறர் நடக்கும் போது எழும் அதிர்வினால் ஆளை இனம் காணவும் அவர் அறிந்து கொண்டார்.

1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். “தி ஸ்டோரி ஆஃப் மை லைப்“ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கல்லூரி பருவத்திலேயே. மொத்தம் 12 நூல்கள்எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார்.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் - ஹெலன் சொன்னது, நாம் நினைக்க மற(று)ப்பது.
இந்தியா உட்பட 39 நாடுகளில் சொற்பொழிவாற்றியுள்ளார். சேர்ந்த நிதியை பார்வையற்றோர்களுக்கு அளித்தார்.

1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டது.

ஹெலன் சொன்னவை:
---------------------------------------
*வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்.
*ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
*மகிழ்ச்சியான வாழ்க்கை - தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஜீன் 1-1968-ல் உறக்கத்திலேயே அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------
ஐயோ! ஐயோ! என்னைப் போல் கஷ்டம் உலகில் வேறு யாருக்கும் இல்லை என்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஹெலன் ஹெல்லரை விடவா உங்களுக்கு கஷ்டங்கள், இழப்புகள்.

முக்கிய புலன்களை இழந்த ஹெலன் ஹெல்லராலேயே இவ்வளவு சாதிக்க முடிந்ததென்றால்... எல்லா புலனும் நன்கு செயல்படும் உங்களால் சாதிக்க முடிவது? எண்ணி பாருங்கள்...
மூடியிருக்கும் தன்னம்பிக்கை கதவை திறந்து பாருங்கள்...
விடாமுயற்சி என்னும் மந்திர சாவி போட்டு...
என்ன திறந்ததும் திகைத்து விட்டீர்கள்?
அந்த புதையல் உங்களுக்குத் தான்...
நம்ப முடியவில்லையா வெற்றிப் புதையலை வென்ற வெற்றி வீரர் நீங்களே தான்.

No comments:

Post a Comment